பெரியார் குறித்த சர்ச்சை.. ரஜினிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகம் தொடர்ந்த மனு வாபஸ் பெறப்பட்டதால், தள்ளுபடி செய்யப்பட்டது.

துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, 1971ம் ஆண்டில் ராமர், சீதை சிலைகளுக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் நடத்தினார்.. என்று ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். ஆனால், அவர் பேசியதில் பாதி பொய் என்றும், பெரியாரை அவமதிப்பதற்காகவே ரஜினி அப்படி பேசியுள்ளார் என்றும் பெரியார் ஆதரவு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

மேலும், ரஜினிக்கு எதிராக போலீசில் புகார்கள் அளிக்கப்பட்டன. சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கோவை காட்டூர் காவல் நிலையங்களில் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், புகார் கொடுத்த 15 நாள் கூட முடியவில்லை. அதற்குள் ஐகோர்ட்டுக்கு வர வேண்டிய அவசரம் என்ன? கேள்வி எழுப்பினர். மேலும், புகார் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு கால அவகாசம் கொடுத்து அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்கு பின்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தைத்தான் மனுதாரர்கள் அணுக வேண்டும். ஆனால், நேரடியாக ஐகோர்ட்டுக்கு வந்திருக்கிறார்கள். இந்த மனுவை விசாரணை பட்டியலில் சேர்த்ததே தவறு...என்று நீதிபதி ராஜமாணிக்கம் கூறினார்.

இதையடுத்து, மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்வதாக மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

More News >>