அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி திடீர் கைது.. 11 பிரிவுகளில் வழக்கு

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

அதிமுகவில் எம்.ஜி.ஆர். காலம் முதல் பல பொறுப்புகளில் இருந்தவர் கே.சி.பழனிசாமி. கடந்த 1989ம் ஆண்டில் திருச்செங்கோடு எம்.பி.யாகவும், அதன்பிறகு காங்கேயம் எம்.எல்.ஏ.வாகவும் இருந்திருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக 2 ஆக பிரிந்த போது, ஓ.பன்னீர்செல்வத்தை தீவிரமாக ஆதரித்து அந்த அணியில் இருந்தார். அப்போது அதிமுகவின் சட்டவிதிகளின்படி புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டுமென்று தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தார்.

இதன்பிறகு, 2 அணிகளும் இணைந்த பிறகு அந்த மனுவை அவர் வாபஸ் பெறவில்லை. இதனால், அவர் மீது எடப்பாடி பழனிசாமி அணிக்கு கடுங்கோபம் இருந்தது. அந்த சமயத்தில், காவிரி விவகாரத்தில் மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால், அதன் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம் என்று கருத்து கூறினார். இதையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் அவரை கட்சியில் இருந்து நீக்கினர்.

ஆனாலும் கூட, கே.சி.பழனிசாமி தொடர்ந்து தொலைக்காட்சி விவாதங்களில், முன்னாள் எம்.பி என்ற பெயரில் பங்கேற்று வந்தார். அதிமுகவின் இப்போதைய செயல்பாடு, எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளுக்கு மாறாக இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், கோவை லாலி ரோட்டில் உள்ள கே.சி.பழனிசாமி வீட்டுக்கு இன்று அதிகாலையில் சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். அவர் மீது முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகார் கொடுத்திருந்தார். அதில், அதிமுகவின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் அவர் சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாகவும், சட்டவிரோதமாக அதிமுக பெயரில் இணையதளம் நடத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில், சூலூர் காவல் நிலையத்தில் அவர் மீது 11 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இபிகோ பிரிவுகள் 417(ஏமாற்றுதல்), 418(நம்பிக்கை துரோகம்) 419(ஆள்மாறாட்டம்) 464(போலி ஆவணம்) 465(போலி ஆவணம் மூலம் மோசடி) 468(திட்டமிட்டு ஏமாற்றுதல்) 479(சட்டவிரோதமாக குறீயடுகளை பயன்படுத்துதல்), 481, 482, 485(மற்றவர் சொத்து குறியீட்டை பயன்படுத்துதல்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

More News >>