டெல்லியில் ரூ.1000 கோடி ஹெராயின் அழிப்பு..
டெல்லியில் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து வைத்திருந்த ரூ.1000 கோடி மதிப்புள்ள ஹெராயின் என்ற போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.
மத்திய சுங்கத் துறை அதிகாரிகள், நாடு முழுவதும் போதை பொருள் கடத்தல்களை கண்காணித்து, அவற்றை தடுத்து வருகின்றனர். போதை கடத்தல் ஆசாமிகளிடம் சிக்கும் போதைப் பொருட்களை அவர்களின் மீதான வழக்குகள் முடியும் வரை வைத்திருந்து, பின்னர் அழித்து விடுகின்றனர்.
டெல்லியில் நிலோட்டி என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கழிவு சேகரிப்பு மையத்தில் மொத்தம் 207 கிலோ 109 கிராம் ஹெராயினை சுங்கத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நேற்று(ஜன.24) அழித்தனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத முறையில் அவை அழிக்கப்பட்டது.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 15 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டதே இந்த ஹெராயின் போதைப் பொருள். இதன் மொத்த மதிப்பு ரூ.1,000 கோடி இருக்கும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.