கொரோனா வைரஸ் தாக்குதல்.. முன்னெச்சரிக்கை குறித்து மத்திய அரசு ஆலோசனை..
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டார்.
சீனாவில் ஹுபை மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதையடுத்து, அந்த நகருக்கு சீல் வைக்கப்பட்டு, விமானநிலையம், பேருந்து நிலையம் என்று அனைத்து இடங்களிலும் மக்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
ஆனாலும் இந்த வைரஸ் வேகமாக பரவி, சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. சீனாவின் தேசிய சுகாதார நிறுவனம் இன்று(ஜன.25) வெளியிட்ட அறிக்கையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இது வரை 41 பேர் பலியாகியுள்ளதாகவும், 1287 பேர் நோய் பாதித்து சிகிச்சையில் உள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.
மேலும், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது. தற்போது, இந்த வைரஸ் தாக்குதல் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே 7 சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அந்த விமான நிலையங்களுக்கு வந்துசேரும் அனைத்து பயணிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நேற்று(ஜன.24) மேலும் 12 சர்வதேச விமான நிலையங்களில் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டிருக்கிறது. சீனாவில் இருந்து மும்பைக்கு வந்த பயணிகளில் 2 பேருக்கு காய்ச்சல் இருந்ததால் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். எனினும், அவர்களுக்கு அந்த கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதாக கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இன்று காலையில் தீவிர ஆலோசனை நடத்தினர். இதில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது குறித்தும், மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.