நடிகர் சங்கத்தின் தேர்தல் ரத்து.. 3 மாதத்தில் புது தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவு..
சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்ற ஆண்டு ஜுன் மாதம் 23-ம் தேதி தேர்தல் நடத்தது. புதிய நிர்வாகிகளுக் கான தேர்தலில் விஷால்-நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ்-ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் மோதின . சங்க உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஆனால் இந்த தேர்தலை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது, இதையடுத்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் நடிகர் சங்க பணிகளை கவனிக்க சங்கத்துக்கு தனி அதிகாரியை தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி சார்பில் வழக்கு தொடரப் பட்டது.
நடிகர் சங்க தேர்தலில் குளறுபடி உள்ளதால் தேர்தலை செல்லாது என அறிவிக்க கேட்டு சங்க உறுப்பினர்கள் பெஞ்சமின், எழுமலை ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் முறைகேடு எதுவும் நடக்கவில்லை வாக்கு எண்ணிக்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கல்யாணசுந்தரம் தீர்ப்பு வழங்கினார்.
கடந்தாண்டு ஜுன் மாதம் 23-ம் தேதி நடந்த நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது. பதவிக் காலம் முடிந்த பின் எடுத்த முடிவால் நீதியரசர் பத்மநாபனின் நியமனமும், அவர் நடத்திய தேர்தலும் செல்லாது. புதிதாக நடிகர் சங்க உறுப்பினர் பட்டியலை தயாரித்து 3 மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். மறுதேர்தல் நடத்தி முடிக்கும்வரை நடிகர் சங்கத்தை சிறப்பு அதிகாரி கீதா தொடர்ந்து கவனிக்கலாம் என நீதிபதி உத்தரவில் கூறி உள்ளார்.
மேலும் நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நாசர், கார்த்தி தொடர்ந்த மனுக்களும், நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண உத்தரவிடக் கோரிய விஷாலின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.