திமுக தலைமைக்கழக செயலாளர் பதவியில் இருந்து டி.ஆர்.பாலு நீக்கப்பட்டது ஏன்?
திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். இது வரை அந்த பதவியில் இருந்த டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற திமுக குழு தலைவராக மட்டும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழு தலைவர் பொறுப்பு வகிப்பதால், அவருக்கு பதிலாக கே.என்.நேரு எம்.எல்.ஏ, தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருச்சியில்தான் திமுக அமோக வெற்றி பெற்றது. மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், 12 ஒன்றியத் தலைவர்கள் என அந்த மாவட்டத்தில் முழு வெற்றி பெற்றது. இதற்கு திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு முக்கிய காரணம் என்று பேசப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் வெற்றி பெற்றவர்களின் மாநாட்டை கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சியில் கடந்த 31ம் தேதி நடத்தினார். இதன் தொடர்ச்சியாகவே, நேருவுக்கு தலைமை கழக முதன்மைச் செயலாளர் பதவியும் தரப்பட்டுள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர்.
அதே சமயம், இன்னொரு தகவலும் திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதாவது, டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டோர் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை கழட்டி விட தீவிரமாக இருந்ததாகவும், தங்கள் சொந்த லாபத்திற்காக அவர்கள் அந்த முயற்சியில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது. பாஜகவின் பக்கம் திமுக சாய்ந்தால் மத்திய அரசில் அமைச்சர் அல்லது மக்களவை துணை சபாநாயகர் பதவி தனக்கு கிடைக்கும் என்று டி.ஆர்.பாலு விரும்பியிருக்கலாம். அதனால், அவர் காங்கிரசை கழட்டி விட நினைத்திருக்கலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. ஆனால், பாஜகவுடன் திமுக சேர்ந்தால் அது அடுத்த சட்டசபை தேர்தலில் தற்கொலைக்கு சமமாகி விடும் என்று பரவலாக கருத்து நிலவுகிறது. அதை ஸ்டாலின் புரிந்து கொண்டுதான், மீண்டும் காங்கிரசுடன் இணக்கமாகி விட்டார். மேலும், அது தொடர்பான அறிக்கையில் குள்ளநரிகள் சிலர் கூட்டணியை உடைக்க முயற்சித்தார்கள் என்றும் குறிப்பிட்டதாக சொல்லப்படுகிறது.