அமைச்சர் கருப்பணனை நீக்க கவர்னரிடம் திமுக புகார்
திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் என்று பேசியுள்ள அமைச்சர் கருப்பணனை நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் திமுக புகார் கொடுத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே செண்பகப்புதூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் கருப்பணன் பேசும் போது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் திமுக வெற்றி பெற்ற ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும். அதனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அதிமுக ஒன்றியங்களுக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார்.இது தொடர்பாக, திமுக பொருளாளர் துரைமுருகன், கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு ஒரு புகார் அனுப்பியுள்ளார். அதில், அமைச்சர் கருப்பணன், திமுக வெற்றி பெற்ற ஊராட்சி ஒன்றியங்களுக்கு குறைந்த நிதியே ஒதுக்கப்படும் என்று பேசியுள்ளார். அது ஆட்சியின் வரம்பு மீறி உளறாக உள்ளது.
அரசியலமைப்பு சட்டப் பிரிவு 164(3)ன் கீழ், எவ்வித அச்சமுமின்றி, பாகுபாடு காட்டாமல் சொந்த விருப்பு, வெறுப்பு இல்லாமல் செயல்படுவேன் என்று அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்றிருக்கிறார்கள். ஆனால், அதை மீறும் வகையில் தற்போது வெளிப்படையாக அமைச்சர் கருப்பணன் பேசியுள்ளார். அதற்கான ஆதாரங்களை இணைத்துள்ளோம். எனவே, அவரை ராஜினாமா செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
கவர்னர் புரோகித் இது தொடர்பாக அந்த அமைச்சரிடம் விளக்கம் கேட்கவுள்ளார் என்றும் அதன்பிறகு கவர்னர் முடிவெடுப்பார் என்றும் கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.