டி.என்.பி.எஸ்.சி முறைகேடு.. இது வரை 12 பேர் கைது.. முக்கிய குற்றவாளி சிக்கவில்லை
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கில் இது வரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடைத்தாள்களை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி ஜெயக்குமார் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சில இடைத்தரகர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் ரகசிய கூட்டு வைத்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 99 பேர் மட்டும் இடைத்தரகர்கள் கூறியபடி, ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடைத்தரகர்கள் ஒரு பேனாவை அளித்திருக்கிறார்கள். அதைக் கொண்டு எழுதினால், விடைகளை எழுதிய சில மணி நேரத்தில் அவை மறைந்து விடும்.
இப்படி அழிந்து விட்ட விடைத்தாள்களில், தேர்வு அலுவலர்களின் துணையுடன் இடைத்தரகர்கள் சரியான விடைகளை எழுதியிருக்கிறார்கள். இப்படியாக 99 பேரின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்ததும் தெரிய வந்துள்ளது. அந்த 99 பேரில் 39 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளனர். இதையடுத்து, தேர்வு அதிகாரிகளாக பணியாற்றிய ராமேஸ்வரம் தாசில்தார் பார்த்தசாரதி, கீழக்கரை தாசில்தார் வீரராஜ் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை ஆவடியைச் சேர்ந்த வெங்கட்ராமன் (38) என்ற இடைத்தரகர் பலரிடம் ரூ.10 லட்சம் வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்த திருவேல்முருகன்(31), கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த ராஜசேகர்(26), ஆவடி கவுரிப்பேட்டையைச் சேர்ந்த காலேஷா(29) ஆகிய 3 பேரும் இடைத்தரகர்களிடம் பல லட்சம் கொடுத்து முறைகேடாக அதிக மதிப்பெண் பெற்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களும் கைது செய்யப்பட்டனர்.ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் இருந்து விடைத்தாள்களை சென்னைக்கு வேனில் கொண்டு செல்லும் போதுதான், பணம் கொடுத்த 99 பேரின் விடைத்தாள்களை திருத்தியுள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த டி.என்.பி.எஸ்.சி. அலுவலக உதவியாளர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம்காந்தன்(45) என்பவரும் கடந்த 2 நாள் முன்பாக கைது செய்யப்பட்டார். அவரிடம்தான் வேனில் விடைத்தாள்கள் கொண்டு செல்லப்பட்ட போது அதற்கான சாவி இருந்துள்ளது. அவருடைய வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்திய போது 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.இந்த செல்போன்களில் பதிவாகியிருந்த எண்களை கொண்டு, இடைத்தரகர்கள் மற்றும் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட விண்ணப்பதாரர்களை போலீசார் கண்டுபிடித்து வரிசையாக கைது செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தர்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். பணம் கொடுத்து முறைகேடாக தேர்வு எழுதிய கார்த்தி(30), வினோத்குமார்(34), சேர்ந்த சீனுவாசன்(33) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களையும் சேர்த்து குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேனில் விடைத்தாள்கள் கொண்டு செல்லப்பட்ட போது, வேனை ஓரிடத்தில் நிறுத்தி, ஓம்காந்தனிடம் இருந்து சாவியை பெற்று விடைத்தாள்களை திருத்தம் செய்த ஜெயக்குமார் என்ற முக்கிய குற்றவாளி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை பிடிபட்டதும்தான் பல முக்கிய தகவல்கள் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வு முறைகேட்டில் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் ஜெயக்குமாரை விசாரித்த பின்புதான் தெரியும் என்று போலீசார் கூறினர்.