ஜனவரியில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.15 லட்சம் கோடி..
ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் பொருளாதார மந்த நிலை காரணமாக கடந்த சில மாதங்களாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) வசூல் குறைந்து காணப்பட்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ஒரு லட்சத்து 3 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போது ஜனவரியில் இது ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிப்ரவரியிலும் இதே அளவுக்கு ஜிஎஸ்டி வசூலிக்கவும், மார்ச்சில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி வசூலிக்கவும் மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வருமான வரி உள்ளிட்ட நேரடி வரி வசூலை பொறுத்தவரை 11 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.
நடப்பாண்டின் 2 வது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.5 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2013ம் ஆண்டு மார்ச்சுக்கு பிறகு இதுதான் மிகக் குறைவானதாகும். 2019-20ம் நிதியாண்டின் முடிவில் இது 5 சதவீதமாகவே இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.