ஒழுக்கமான இளைஞர்களால் நாடு பலமானதாக மாறும்.. பிரதமர் மோடி பேச்சு..

ஒழுக்கமான இளைஞர்கள் மூலமாகவே நாடு பலமானதாக இருக்கும் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

டெல்லியில் தேசிய மாணவர் படை(என்.சி.சி) பேரணி நடைபெற்றது. இதன் முடிவில், கரியப்பா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, விருதுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எந்த நாட்டில் இளைஞர்கள் ஒழுக்கமாக செயல்படுகிறார்களோ அந்நாடு பலமாகவும், சுயச்சார்புடையதாகவும் இருக்கும். அதன் வளர்ச்சியை தடுக்க முடியாது. இந்தியா அதிகமான இளைஞர்களை கொண்டுள்ள நாடு என்பதில் பெருமை கொள்கிறோம். அதே சமயம், நாடு இளமை துடிப்புடன் செயல்பட வேண்டும்.

நாம் கடந்த கால சவால்களையும், நிகழ்கால தேவைகளையும், எதிர்கால லட்சியங்களையும் கருத்தில் கொண்டு இணைந்து செயல்பட வேண்டும். காஷ்மீரில் முன்பு என்ன நடந்தது? மூன்று, நான்கு குடும்பங்கள் இருந்து கொண்டு அங்குள்ள பிரச்னைகளை சரி செய்வதற்கு பதிலாக சீரழித்து கொண்டிருந்தது. அதனால், பயங்கரவாதம் தலைதூக்கி மக்கள் புலம்பெயர்ந்து சென்றார்கள். வடகிழக்கு மாநிலங்களில் பல தீவிரவாத குழுக்கள் செயல்பட்டன. அந்த குழுக்களுக்கு அரசியல்சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. வன்முறையில்தான் ஈடுபட்டன. ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் அவை மாறி வருகின்றன. நேற்று வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் நிறைவேறியிருக்கிறது. போரோலாந்து தேசிய ஜனநாயகக் குழுவுடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

More News >>