கொரோனா வைரஸ் பாதிப்பு.. விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் சோதனை..
சீன வைரஸ் கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்று வெளிநாடுகளில் இருந்து பயணிகளுக்கு விமான நிலையங்களில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய நோய்க்கிருமி பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இது சீனாவில் பல மாகாணங்களில் பரவி இது வரை 108 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டும் 4 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் கொரோனா வைரஸ் நோய், அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான் உள்பட 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் பீகாரில் ஒருவருக்கு முதன்முதலில் இந்த நோய் அறிகுறி தென்பட்டது. சீனாவில் இருந்து மத்தியபிரதேசத்திற்கு திரும்பிய ஒருவருக்கும் இந்த நோய் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உஜ்ஜையினியில் அவர் தனி அறையில் சிகிச்சையில் இருக்கிறார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பதைக் கண்டறியும் பலத்த பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறியதாவது:
கொரோனா வைரஸ் அறிகுறி உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்களுக்கு வந்திறங்கும் பயணிகளில் காய்ச்சல், சளி, தும்மல் போன்றவை இருந்தால் அவர்களை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக, விமான நிலைய ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் மக்கள் முதல் வேலையாக கைகளை கழுவ வேண்டும். பொதுவாகவே, பல முறை கைகளை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை முழுமையாக சமைத்து சாப்பிட வேண்டும்.இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுவரை சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 15 ஆயிரம் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே புனாவில் உள்ள ஆய்வுக் கூடத்தில் ரத்த பரிசோதனை செய்யப்படுகிறது. தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டதால் பயணிகள் அனைவரும் அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் அவர்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.