இந்தியாவுக்கு பரவியது கொரோனா வைரஸ்.. கேரள மாணவருக்கு பாதிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்தது. இந்தியாவில் முதன் முதலாக கேரளாவில் ஒரு மாணவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த மாதம் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதையடுத்து, இந்த வைரஸ் சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. மேலும், சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்த சீன வைரஸ் நோய் தாக்குதல் தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா, தைவான், நேபாளம், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இந்த நோய் பரவுவதை தடுக்கவும், நோய் பாதிப்புகளை தடுக்கவும் பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

தற்போது வரை சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 7711 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் சீனாவில் இருந்து நாடு திரும்பியவர்களை விமான நிலையங்களில் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். இதில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜையினியில் ஒருவருக்கும், பீகாரைச் சேர்ந்த ஒருவருக்கும் நோய் கிருமி இருக்கலாம் என சந்தேகப்பட்டு, அவர்களின் ரத்தமாதிரிகளை எடுத்து, புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பினர். எனினும் நோய் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில், கேரளாவில் மாணவர் ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது இன்று(ஜன.30) கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த மாணவர், சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகிய உகான் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்தவர். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் தனது சொந்த ஊருக்கு திரும்பி, சிகிச்சை பெற்றார். அவரை தனியாக வைத்து பரிசோதித்து பார்த்ததில், அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் இவருக்குத்தான் முதன்முதலில் கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

More News >>