தஞ்சை பெரிய கோயிலில் தமிழிலும் குடமுழுக்கு.. மதுரை ஐகோர்ட் கிளை ஏற்பு
தஞ்சை பெரிய கோயிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத் துறை அளித்த உறுதிமொழியை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்தது மதுரை ஐகோர்ட் கிளை.
தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது. இந்த முறை தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆன்மீக மாநாடும் நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், சைவ ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ள பெரிய கோயிலில், தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றும், மீறி குடமுழுக்கை நடத்தினால் ஏற்கனவே ஏற்பட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதன்பின்னர், தஞ்சை பெரிய கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த மத்திய தொல்லியல் துறையின் அனுமதி பெறவில்லை என்றும், அனுமதி பெறாமல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞர் சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகளிடம் முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தஞ்சை பெரிய கோவிலில் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கு நடத்தப்படும். குடமுழுக்கு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படும் என்று கூறப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அறநிலையத்துறை அளித்த உறுதிமொழியை ஏற்று வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மேலும், அறநிலையத்துறை அளித்த உறுதிமொழியின்படி தமிழில் குடமுழுக்கு செய்த பின்பு, அது தொடர்பான அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.