5 லட்சம் கோடி பொருளாதாரம்.. ஜனாதிபதி உரையில் தகவல்..

ரூ.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(ஜன.31) தொடங்கியது. கூட்டத்தின் முதல் நாள் என்பதால், குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற மைய அரங்கில் நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:மத்திய அரசு, பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாகிப் புனித தலத்திற்கான பாதையை குறிப்பிட்ட காலத்திற்குள் உருவாக்கித் தந்துள்ளது.

ராமஜென்மபூமி வழக்கில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை ஏற்று அனைத்து தரப்பு மக்களும் அமைதியை கடைபிடித்தது மிகவும் பாராட்டக்கூடியது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்தது வரலாற்று சிறப்புமிக்கது. மேலும், ஜம்முகாஷ்மீர் மற்றும் லடாக் பிரதேசம் சமமாக வளர்ச்சியடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரு அவைகளிலும் நிறைவேற்றியிருக்கிறோம். அதே போல், அனைத்து சமூகத்தினரும் குடியுரிமை பெறுவதற்கு ஏற்கனவே சட்டத்தில் இடம் உள்ளது. டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. சுயதொழில்களில் ஈடுபட இளைஞர்களை ஊக்குவித்து வருகிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ரயில்வே துறையிலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து வருகிறோம். மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளையே அதிகமாக வாங்குவதற்கு முன் வர வேண்டும்.நாடு 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு மத்திய அரசு உறுதியேற்று, அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போடோலாந்து பிராந்திய பகுதி மக்களின் வளர்ச்சிக்காக ரூ.1500 கோடியை மத்திய அரசு செலவிட உள்ளது. இவ்வாறு குடியரசு தலைவர் பேசினார்.

More News >>