விவசாயக் கடன்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு
இந்த ஆண்டு விவசாயக் கடன்களுக்கு ரூ.15 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. மத்திய அரசின் 2020 -2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் அவர் கூறியதாவது:விவசாயக் கடன்களுக்கு இந்த ஆண்டு 15 லட்சம் கோடி ஒதுக்கப்படும். 100 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, தண்ணீர் பற்றாக்குறை இல்லாத மாவட்டங்களாக மாற்றப்படும். குடிநீர் திட்டங்களை செயல்படுத்துவதற்கு ஜல்ஜீவன் அமைப்புக்கு 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும்.
2022-23ம் ஆண்டுக்குள் மீன் உற்பத்தியை 200 லட்சம் டன் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 2 ஆயிரம் புதிய மருத்துவமனைகள் கட்டப்படும். பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்துக்கு ரூ.69 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.