ஒரு லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் திட்டம்..
ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை கிடைப்பதற்கு ஆப்டிகல் பைபர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. மத்திய அரசின் 2020 -2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில் அவர் கூறியதாவது:தொழில் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு 27 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.
ரயில்வே வழித்தடங்களில் அதிக அளவு சூரியமின்சக்தி பயன்டுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்குள் 6 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி-மும்பை விரைவுச் சாலை உள்பட 3 விரைவுச் சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு சிறப்பான இணையதள சேவை கிடைக்கும் வகையில் ஆப்டிகல் பைபர் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
மக்களுக்கு நேரடி மானியம் அளிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களை மத்திய அரசு கொண்டு வரும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 2024ம் ஆண்டுக்குள் புதிதாக 100 விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும். தேஜஸ் ரயில்கள் அதிகமாக இயக்கப்படும்.
போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.