டிஎன்பிஎஸ்சி முறைகேடு.. முக்கிய குற்றவாளியின் வங்கி கணக்குகள் முடக்கம்
டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் இது வரை தலைமறைவாக உள்ளார். இந்நிலையில், அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 4 தேர்வு தரவரிசை பட்டியலில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் மையங்களில் தேர்வெழுதிய 39 பேர், முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். அவர்கள் வெளியூர்களில் இருந்து அங்கு வந்து தேர்வு எழுதியவர்கள் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து, இதில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.குரூப்4 தேர்வு முறைகேடு பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த ஆண்டு நடந்த குரூப்2 ஏ தேர்விலும் இதே போல் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.8 லட்சம், ரூ.10 லட்சம் என்ற இடைத்தரகர்களிடம் கொடுத்து, மோசடி செய்து ஏராளமனோர் அரசு பணியில் சேர்ந்திருக்கிறார்கள். இது பற்றியும் தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இது வரை தலைமைச் செயலக அதிகாரி, பத்திப்பதிரவு துறை ஊழியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இந்நிலையில், குரூப் 2, குரூப் 4 தேர்வு முறைகேடுகளுக்கு மூளையாக செயல்பட்டது ஜெயக்குமார் என்ற இடைத்தரகரும், சித்தாண்டி என்ற சப்-இன்ஸ்பெக்டரும்தான். ஜெயக்குமாரை பிடித்தால், இந்த முறைகேடுகளில் ஆளும்கட்சி வி.ஐ.பி.க்கள் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதும் தெரிய வரும்.
ஜெயக்குமார் வீடு, சென்னை முகப்பேர் மேற்கு கவிமணி சாலையில் உள்ளது. இங்கு கடந்த வாரம் போலீசார் சோதனை செய்ததில் பென்டிரைவ், மடிக்கணினி, 60க்கும் மேற்பட்ட பேனாக்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஜெயகுமாரை கைது செய்தவதற்காக அவரது புகைப்படத்தை தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளனர். ஜெயகுமார் குறித்து தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜெயகுமாரின் வங்கிக் கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை முடக்கி வைத்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.