கொரோனா நோயால் 425 பேர் உயிரிழப்பு..ஹாங்காங்கில் முதல் மரணம்
கொரோனா வைரஸ் நோய் தாக்குதலில் இது வரை 425 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் ஹுபெய் மாகாண தலைநகர் உகான் நகரில் கொரோனா வைரஸ் நோய் தாக்குதல் கடந்த டிசம்பரில் கண்டறியப்பட்டது. இது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் என்பதால், அந்த நகரில் வேகமாக பரவியது. இதன்பின், இந்த வைரஸ் நோய் சீனாவிலேயே பல மாகாணங்களுக்கு பரவியது. சீனாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.
இந்த நிலையில், சீனா முழுவதும் 2,829 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது உகான் நகரில் 10 நாளில் 2 மருத்துவமனைகளை கட்டி முடித்துள்ளனர். அதில் ஒரு மருத்துவமனை நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. அங்கு கொரோனா வைரஸ் தாக்கியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஹுபெய் மாகாணத்தில் மட்டும் 64 போ் உயிரிழந்தனா். ஹாங்காங்கின் வாம்போ கார்டன் பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது இளைஞர் ஒருவா் நேற்று உயிரிழந்தார். இது சீனாவுக்கு வெளியே இரண்டாவது உயிரிழப்பு ஆகும். இதற்கு முன்பு, பிலிப்பைன்ஸில் ஒருவர் கொரோனா நோய் தாக்குதலில் பலியாகி இருந்தார்.
இதைத்தொடா்ந்து, கொரோனா வைரஸ் நோய் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 425 ஆக அதிகரித்துள்ளது. அதே போல், இந்த வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,400 ஆக அதிகரித்துள்ளது என்று ஹூபெய் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஹாங்காங்கின் எல்லைகளும் மூடப்பட்டுள்ளது. அங்கு நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.