தஞ்சை பெரிய கோயிலில் நாளை கும்பாபிஷேகம்..

தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

தமிழ் மன்னரால் கட்டப்பட்டு, தமிழர்களால் பூஜிக்கப்படும் இந்த கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. ஆனால், ஆகமவிதிகளின்படி சமஸ்கிருதத்தில்தான் கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டுமென்று பிராமண அர்ச்சகர்கள் கூறினர்.

இதையடுத்து, தமிழில் குடமுழுக்கு நடத்த கோரி ஓதுவார்கள், சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் ஒரு மாநாடு நடத்தினர். அதே போல், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, குடமுழுக்கு தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் நடத்தப்படும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.இந்நிலையில், நாளை குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தஞ்சாவூரில் குவிந்து வருகின்றனர்.

நாளை அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம் ஆகியவை நடைபெறவுள்ளது. காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கு, 10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடக்கிறது. மாலை, 6 மணிக்கு, பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு, 8:00 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேலவீதி, வடக்குவீதி ஆகிய இடங்களில், மூன்று திருமண மண்டபங்களில் காலை, மாலை சிற்றுண்டியும், மதியம் உணவும் வழங்கப்படுகிறது. அதே போல், சீனிவாசபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் சிவாச்சாரியார்களுக்கும், மேலவீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் உணவு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கின்போது சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழி பெயர்க்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மணிகானந்தா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

More News >>