நீரவ் மோடி மேலும் 1,322 கோடி மோசடி செய்திருப்பது கண்டுபிடிப்பு!
நீரவ் மோடி பஞ்சாப் நேசனல் வங்கியில் மேலும் 1,322 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அதிகாரப்பூர்வமாக நீரவ் மோடி மோசடி செய்த தொகை, 11 ஆயிரத்து 360 கோடி ரூபாய் என்றிருந்த நிலையில், அந்த விவரங்கள் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், நீரவ் மோடி - மெகுல் சோக்ஸி ஆகியோர் மேலும், 1,322 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வமற்ற பரிவர்த்தனை மூலம் பங்கு பரிமாற்றத்தில், இந்த மோசடி நடந்திருப்பதாகவும், இதன்மூலம், பஞ்சாப் நேசனல் வங்கியிலிருந்து நீரவ் மோடி செய்துள்ள மோசடி 12,682 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் பஞ்சாப் நேசனல் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பை பிராடி ஹவுஸ் பஞ்சாப் நேசஷனல் வங்கியின் கிளையில் 11 ஆயிரத்து 360 கோடி ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. இந்த மோசடியை குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது மனைவி ஏமி மோடி, சகோதரர் நிஷால், சித்தப்பா மெகுல் சோக்ஸி ஆகியோர் கூட்டு சேர்ந்து செய்திருப்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, நீரவ் மோடியின் மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது தெரிய வந்ததால், 6 வங்கி அதிகாரிகள் உட்பட 14 பேரை சிபிஐ கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.