மூன்று ஆண்டுகளாக சபாநாயகர் என்ன செய்தார்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தாமல் சபாநாயகர் மூன்றாண்டுகளாக என்ன செய்தார்? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்த போது ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஜெயலலிதா மரணத்திற்குப் பின், முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகினார். அப்போது தன்னை சசிகலா குடும்பம் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததாக குற்றம்சாட்டி தர்மயுத்தம் நடத்தினார். ஆனாலும், கூவத்தூரில் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகி விட்டார். அவர் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய போது, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் கைகோர்த்து, சசிகலா குடும்பத்தை ஒதுக்கித் தள்ளினர். ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார். இதையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விஷயத்தில் சபாநாயகர் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், ஐகோர்ட் தலையிட முடியாது என்று கூறி, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அம்மனுவை தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து சக்கரபாணி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இந்நிலையில், வழக்கை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு நேற்று(பிப்.5) விசாரித்தது. அப்போது, சபாநாயகர் அலுவலகம் சார்பில் தமிழக அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜரானார்.

அவரிடம் தலைமை நீதிபதி போப்டே, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 பேரும் அதிமுக உறுப்பினர்களாக இருந்த போதும், அக்கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்துள்ளனர். அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தாமல் மூன்று ஆண்டுகளாக சபாநாயகர் ஏன் கிடப்பில் போட்டார்? என்று கேட்டார்.

அதற்கு அட்வகேட் ஜெனரல் பதிலளிக்கும் போது, கடந்த 2017ம் ஆண்டு சட்டசபையில் எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடித்த பின்பு, ஓ.பி.எஸ். உள்பட 11 பேர் மீது புகார் வந்தது. ஆனால், அதில் சபாநாயகர் முடிவெடுக்கும் முன்பாக 2017ம் ஆண்டு மார்ச் 20ம் தேதியன்று ஓ.பன்னீர்செல்வம் குழுவை தேர்தல் ஆணையம் தனிக்குழுவாக அங்கீகரித்தது. அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகிய இரு அணிகளும் இணைந்தன. அதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதன்பின், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் அங்கீகரிக்கப்பட்டனர். எனவே, இது போன்ற அடுத்தடுத்த நிகழ்வுகளால் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் காத்திருந்தார் என்று கூறினார்.

ஆனாலும், மூன்றாண்டுகளாக சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காதது தவறு என்றால், அதை சரி செய்ய வேண்டியுள்ளது என்று தலைமை நீதிபதி கூறினார். மேலும், இது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் சபாநாயகர் பதிலளிக்க வேண்டுமென்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை பிப்.14ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

More News >>