காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்ய கோரி காங்கிரஸ் வெளிநடப்பு
காஷ்மீரில் ஆறு மாதமாக சிறை வைக்கப்பட்டுள்ள பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்யக் கோரி, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர், மத்திய அரசைக் கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன், காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாநிலத்தை பிரித்தது. மேலும், ஜம்முகாஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் அரசியல், சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் சுமார் 500 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையில் அடைத்தனர்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று தலைவர்கள் சிறைவைக்கப்பட்டனர். நேற்றுடன் 6 மாதங்கள் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், எவ்வித காரணமும் இல்லாமல் சிறை வைக்கப்பட்டுள்ள அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இது தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தினர். இதன்பின், மத்திய அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.