தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாசுக்கு மிரட்டல்.. பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனு
ரஜினியின் தர்பார் படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் தனக்கு விநியோகஸ்தர்களிடம் இருந்து மிரட்டல் வருவதாக கூறி, போலீஸ் பாதுகாப்பு கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருக்கிறார்.
ரஜினியின் தர்பார் படத்தை டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கினார். லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்தது. இந்த படம் வெளியான நான்கு நாட்களிலேயே ரூ.150 கோடி வசூலானதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அதற்கு பிறகுதான் படம் விநியோகஸ்தர்களின் கையை கடித்த விஷயம் வெளியானது.
அவர்கள் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, இழப்பீடு கேட்டு ரஜினி வீட்டுக்கு படையெடுத்தனர். ஆனால், அவர்களை ரஜினி சந்திக்கவில்லை. செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்னாற்காடு, நெல்லை, மதுரை, கோவை, சேலம் விநியோகஸ்தர்கள் மீண்டும் ரஜினியையும், முருகதாசையும் சந்திக்க முயற்சித்தனர். அவர்களை இருவருமே சந்திக்க மறுத்தனர். இதையடுத்து, விநியோகஸ்தர்கள் விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாக கூறினர்.
இந்நிலையில், முருகதாஸ் இன்று(பிப்.6) சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். தனக்கு தர்பார் விநியோகஸ்தர்களிடம் இருந்து மிரட்டல்கள் வருவதால், போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அதில் அவர் கூறியிருக்கிறார்.