பழங்குடியின சிறுவனிடம் காலணியை கழட்டி விடச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..
முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழட்டி விடச் சொன்ன வீடியோ, ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம், முதுமலையில் யானைகள் முகாம் இன்று தொடங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமை இன்று காலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதன்பின், அவர் அங்குள்ள ஒரு கோயிலுக்கு சென்றார். அவருடன் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகளும் சென்றனர்.
கோயில் வாசல் அருகே சென்றதும் அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை பார்த்த அமைச்சர் சீனிவாசன், டேய், இங்க வாடா.. என்று அழைக்க, அந்த சிறுவன் தயங்கியபடி நின்றான். அதன்பிறகு அவனை வற்புறுத்தி அழைத்து தனது காலணியை கழட்டி விடச் சொன்னார். அந்த சிறுவன் கழட்டி விட்டான்.இந்த காட்சியை வீடியோ எடுத்து ரோகன்பிரேம்குமார் என்பவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த காட்சி தற்போது வைரலாகி வருவதுடன், பழங்குடியின சிறுவனை இப்படி துச்சமாக மதிப்பதா என்று சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது.