பேரனை போல் நினைத்தேன்.. திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

எனது பேரனை போல் நினைத்துதான் சிறுவனை செருப்பு கழட்டி விடச் சொன்னேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், முதுமலையில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் இன்று தொடங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த முகாமை இன்று காலையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அதன்பின், அவர் அங்குள்ள ஒரு கோயிலுக்கு சென்றார். அவருடன் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அதிகாரிகளும் சென்றனர்.

கோயில் வாசல் அருகே சென்றதும் அங்கு நின்று கொண்டிருந்த பழங்குடியின சிறுவனை பார்த்த அமைச்சர் சீனிவாசன், டேய், இங்க வாடா.. என்று அழைக்க, அந்த சிறுவன் தயங்கியபடி நின்றான். அதன்பிறகு அவனை வற்புறுத்தி அழைத்து தனது காலணியை கழட்டி விடச் சொன்னார். அந்த சிறுவன் கழட்டி விட்டான்.

இந்த காட்சி வீடியோ எடுக்கப்பட்டு ட்விட்டரில் வைரலாக பரவியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அமைச்சர் சீனிவாசன் ஒரு விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், நான் அங்கு இருந்த சிறுவர்களை எனது பேரன்கள் போல்தான் நினைத்தேன். எனவே, சிறுவனை அழைத்து காலணியை கழட்டி விடச் சொன்னதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. காலணிகளை கழட்ட பெரியவர்களை உதவச் சொன்னால் அது தவறாகி விடும் என்றுதான் சிறுவர்களை உதவிக்கு அழைத்தேன் என்றார்.

More News >>