வரலாறுகளை மறந்த மோடி.. ப.சிதம்பரம் தாக்கு

காஷ்மீரில் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் மீது பாதுகாப்பு சட்டம் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். வரலாறுகளை மறந்து விட்டு, பிரதமர் மோடி பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரின் 6 மாத தடுப்புக் காவல் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து, பரூக் அப்துல்லாவை போல் இவர்கள் மீதும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறைக்காவல் வைக்கும் உத்தரவு போடப்பட்டது.

இது குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:உமர், மெகபூபா மீது கொடூரமான முறையில் பாதுகாப்பு சட்டம் போடப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எந்த குற்றச்சாட்டும் இல்லாமல் சிறைக் காவலில் வைப்பது ஜனநாயகத்தில் மிகவும் அருவருப்பான ஒன்றாகும்.

நியாயமற்ற சட்டம் நிறைவேற்றப்படும் போதும், அவை பயன்படுத்தப்படும் போது அவற்றை எதிர்த்து மக்கள் அமைதியான வழியில் போராடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

ஆனால், போராட்டம் நடத்தினாலே நாட்டில் குழப்பம் ஏற்படும் என்றும், சட்டமன்றமும், நாடாளுமன்றமும் என்ன சட்டம் போட்டாலும் மக்கள் கீழ்படிய வேண்டும் என்றும் பிரதமர் பேசுகிறார். மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா போன்றவர்களின் உத்வேகம் அளிக்கும் வரலாறுகளை பிரதமர் மறந்து விட்டு பேசுகிறார். இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

More News >>