மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட விஜய்..

நடிகர் விஜய் இன்று மீண்டும் நெய்வேலி சுரங்கத்திற்கு வந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

நடிகர் விஜய் நடித்த பிகில் படம், கடந்த ஆண்டு வெளியான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியிருக்கிறது. இதில் வருமான வரித் துறைக்கு சரியாக கணக்கு காட்டவில்லை என்று கூறி, விஜய் வீடுகளிலும், படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவன அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர் கல்பாத்தி அகோரம் வீடுகளிலும், மதுரை பைனான்சியர் அன்புசெழியன் அலுவலகம் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

மேலும், கடந்த 5ம் தேதியன்று நெய்வேலி சுரங்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனால், படப்பிடிப்பு பாதியில் ரத்து செய்யப்பட்டது. நெய்வேலியில் இருந்து ஐ.டி. அதிகாரிகள், சென்னை பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு அவரை அழைத்து சென்று நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, நேற்று 2வது நாளாக விஜய்யின் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றது.

பனையூரில் உள்ள வீட்டில் விஜய்யிடம் 8 அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று முழுவதும் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு சொத்து ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றுக்கான வருமான ஆதாரங்களை விஜய் சமர்ப்பித்து கணக்கு காட்டும் போது, அவை திருப்பி தரப்படலாம். மேலும், வருமானங்கள் மறைக்கப்பட்டிருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கப்படலாம். விஜய் ரூ.300 கோடி வரை வருமானத்தை மறைத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், வருமான வரித் துறையினர் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், வருமான வரித் துறை விசாரணை முடிவடைந்ததால், விஜய் இன்று மீண்டும் நெய்வேலிக்கு வந்தார். அங்கு என்.எல்.சி சுரங்கத்தில் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது. அதில் விஜய் நடிக்கத் தொடங்கினார்.

More News >>