டிரம்ப் 24ல் வருகை.. பிரதமர் மோடி மகிழ்ச்சி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24ம் தேதி, இந்தியாவுக்கு வருகிறார். அவரை வரவேற்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு போட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு 2 நாள் அரசு முறைப் பயணமாக வருகிறார். அவருடன் மனைவி மெலானியா டிரம்பும் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். அவர்கள் டெல்லி, அகமதாபாத் நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனா். இது குறித்து, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்றுள்ளார். அதில் அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா டிரம்ப் வரும் 24, 25ம் தேதிகளில் இந்தியாவுக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா அவர்களுக்கு மறக்க முடியாத சிறந்த வரவேற்பை அளிக்கும்.
இந்த வருகை மிகவும் சிறப்புவாய்ந்தது. இது இந்தியா- அமெரிக்கா இடையேயான நட்புறவை நீண்ட காலத்திற்கு வலுப்படுத்த உதவும்.
ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மையில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியான கொள்கைகளை பங்கிட்டு கொள்கின்றன. இந்தியாவும், அமெரிக்காவும் பல்வேறு விஷயங்களில் சிறந்த ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இந்த நட்புறவு இரு நாடுகளுக்கு மட்டுமின்றி உலக மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.