130 கோடி மக்களில் ஒன்றரை கோடி பேர்தான் சரியாக வரி கட்டுகிறார்கள்.. பிரதமர் மோடி கவலை

நூற்றிமுப்பது கோடி மக்கள் வாழும் நாட்டில் வெறும் ஒன்றரை கோடி பேர்தான் முறையாக வரி கட்டுகிறார்கள் என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

டெல்லியில் டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: நூற்றிமுப்பது கோடி மக்கள் வாழும் நாட்டில் வெறும் ஒன்றரை கோடி பேர்தான் முறையாக வருமான வரி செலுத்துகிறார்கள். இந்தியாவில் கடந்த ஆண்டில் ஒன்றரை கோடி கார்கள் விற்றுள்ளன. மூன்று கோடி பேர் வெளிநாடுகளுக்கு வர்த்தகம் மற்றும் இதர விஷயங்களுக்காக சென்று வந்திருக்கிறார்கள்.

கார்கள் விற்பனையும், மக்களின் வெளிநாட்டு பயணங்களும் நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம், வரி வசூலை பார்த்தால் கவலை அளிக்கிறது. டாக்டர்கள், வழக்கறிஞர்கள், சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்கள் என்று பல தொழில் துறை வல்லுநர்கள் இருக்கிறார்கள். ஆனாலும், இவர்களில் வெறும் 2,200 பேர்தான் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் காட்டுகிறார்கள். அதுவும் கூட சுப்ரீம் கோர்ட்டில் இருப்பவர்கள்தான் காட்டுகிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு வரி நிர்வாகத்தை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாடு வரும் 2022ம் ஆண்டில் 75வது சுதந்திர தின விழாவை கொண்டாடப் போகிறது. இந்த தருணத்தில் நமது சுதந்திரப் போராட்ட தலைவர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து, மக்கள் அனைவரும் நேர்மையாக வரி செலுத்த வேண்டும்.இவ்வாறு மோடி பேசினார்.

More News >>