சென்னையில் பிப்.28 வரை பேரணி, கூட்டம் நடத்த தடை காவல்துறை உத்தரவு

சென்னையில் வரும் 28ம் தேதி வரை பொதுக் கூட்டம், பேரணி உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த சென்னை காவல் துறை தடை விதித்துள்ளது.

சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு பேரணி, பொது கூட்டம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு பல்வேறு அமைப்புகளின் சார்பில் மாநகர காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு அனுமதி கொடுத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு மக்களுக்கு தொல்லையாக இருக்கும் என்பதால், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:சென்னையில் அனைத்து ஜமாத் அமைப்புகள் மற்றும் இயக்கங்களின் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணிகள் நடத்த அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. அதே போல், உபேர், ஓலா போன்ற வாடகை கார்களை தடை செய்யக் கோரி, ஏஐடியுசி கார், ஆட்டோ டிரைவர்கள் சங்கம், செங்கொடி ஆட்டோ, கார் டிரைவர்கள் சங்கம் போன்றவை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டுள்ளன. மேலும், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள், ஜனநாயக இளைஞர் சங்கம், கிராமசபைக்கு அதிகாரம் கோரும் அமைப்பு உள்ளிட்டவை போராட்டங்கள், பேரணிகளுக்கு அனுமதி கோரியுள்ளன.

எனவே, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சென்னை மாநகர காவல் துறை சட்டப்பிரிவு 41-ன் கீழ் வரும் 28ம் தேதி வரை சென்னை மாநகரில் பேரணி, கூட்டம், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்றவை நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

More News >>