ஸ்மிரிதி இரானியின் பழைய படத்தை போட்டு ராகுல் காந்தி கிண்டல்..
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து, பாஜக ஸ்மிரிதி இரானி நடத்திய போராட்டப் படத்தை இப்போது ட்விட்டரில் போட்டு ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, சமையல் எரிவாயு(காஸ்), பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும் போது, பாஜகவின் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும் ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் சரிந்திருக்கிறது. அதே சமயம், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலைகள் மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது காஸ் சிலிண்டர் விலை ரூ.144.50 ஆக விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இது கடந்த செப்டம்பரில் இருந்து 6வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் பழைய படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியின் போது காஸ் விலை உயர்வை எதிர்த்து ஸ்மிரிதி இரானி தலைமையில் ஆக்ரோஷமாக பாஜகவினர் போராடிய போது எடுத்த படம்தான் அது.இந்த படத்தை போட்டு, காஸ் விலை சிலிண்டர் ரூ.150 என்று வானுயரத்திற்கு ஏறி விட்டதை எதிர்த்து போராடும் இந்த பாஜக கட்சியினரின் கோரிக்கைக்கு நான் உடன்படுகிறேன் என்று கிண்டல் அடித்துள்ளார்.