தற்போது நிலவும் சூழல்.. நாட்டுக்கு நல்லதல்ல.. பாஜகவுக்கு அகாலிதளம் எச்சரிக்கை

மதச்சார்பின்மை கொள்கைகளில் இருந்து விலகினால், நாடு பலம் இழந்து விடும் என்று மத்திய அரசுக்கு அகாலிதளம் தலைவர் பாதல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், சிரோண்மணி அகாலிதளம் கட்சி உள்ளது. இக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரகாஷ்சிங் பாதல் நேற்று அமிர்தசரஸ் நகரில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:நாட்டில் இப்போது நிலவும் சூழல், நாட்டுக்கு நல்லதல்ல. எல்லா மதங்களும் மதிக்கப்பட வேண்டும். இந்து, முஸ்லிம், சீக்கியம், கிறிஸ்தவம் உள்பட எல்லா மதத்தினரும் ஒரே குடும்பமாக நினைக்க வேண்டும். அவர்களுக்கு இடையே வெறுப்புணர்வு ஏற்படுத்தி விடக் கூடாது.

ஒரு அரசாங்கம் வெற்றி காண விரும்பினால், சிறுபான்மையினரையும் அரவணைத்துதான் செல்ல வேண்டும். நமது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கைகளை பாதுகாக்க வேண்டும். மதச்சார்பின்மை கொள்கைகளில் இருந்து விலகிச் சென்றால், அது நாட்டை பலமிழக்கச் செய்து விடும். மதச்சார்பின்மையை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு பாதல் பேசினார்.

More News >>