11 மாவட்டங்களில் தொடங்கும் புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ1200 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.1200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் இன்று(பிப்.14) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:பள்ளிக் கல்வித் துறைக்கு இந்தாண்டு ரூ.34,841 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சிறைச்சாலைகளுக்கு ரூ.392 கோடி, சாலை பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.1,403 கோடி, சென்னையில் வெள்ளி பாதிப்பை குறைக்க ரூ.100 கோடி, தமிழக காவல்துறைக்கு ரூ.8,876 கோடி, தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி, கிராம உள்கட்டமைப்புகளின் அடிப்படை தேவைகளுக்கு ரூ.500 கோடி என்று ஒதுக்கீடு செய்யப்படும்.
மத்திய அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு கீழ் தமிழகத்தின் 179 திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு வேளாண் மண்டலம் அமைப்பதன் மூலம் விவசாயத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.மேலும், கரும்பு விவசாயிகளின் நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.75 கோடி, மதிய உணவு திட்த்துக்கு ரூ.5,935 கோடி, ஆதிதிராவிடர் முன்னேற்றத்திற்காக ரூ.4,109 கோடி, ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்விக்கு ரூ.2,018 கோடி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு ரூ.1,064 கோடி என்று நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதே போல், ஜவுளித்துறைக்கு ரூ.1,224 கோடி, தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.1,53 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.281 கோடி, மகளிர் நல திட்டங்களுக்கு ரூ.78,796 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும், தமிழகத்தில் 37 மாவட்டங்களிலும் முதியோர் ஆதரவு மையங்கள் தொடங்கப்படும். புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு அரசு அலுவலக வளாகம் அமைக்க ரூ.550 கோடி, தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74 கோடி, சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.4,315 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.