சொன்னதை செய்யவில்லை - மோடி மீது பாயும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மோடி தன்னிடம் வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை செயல்படுத்த தவறிவிட்டார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் அனைத்து மாநில ஆளுநர்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “அமெரிக்காவில் இருந்து ஹார்லே டேவிட்சன் இருசக்கர வாகனங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய வேண்டுமானால் 100 சதவிகிதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டியுள்ளது.

நான் பிரமாதமான மனிதராக நினைக்கும் இந்திய பிரதமர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு இந்த இறக்குமதி வரியை 50 சதவிகிதமாக குறைத்து விட்டோம் என்று தெரிவித்தார். நானும் சரி என்றேன். ஆனால், இதுவரை எதுவுமே நடக்கவில்லை. நமக்கு எதுவுமே கிடைக்கவில்லை. நமக்கு 50 சதவிகிதம் சலுகை செய்வதாக அவர்கள் நினைக்கிறார்கள். இது சலுகையே அல்ல.

அவர் அழகான மனிதர் (பிரதமர் மோடி பேசும் பாணியில் தனது குரலை மாற்றியபடி) இறக்குமதி வரியை 75 சதவீதமாக குறைத்தோம், இப்போது மேலும் 50 சதவீதமாக குறைத்து விட்டோம் என்று அவர் என்னிடம் கூறினார். நான் என்ன சொல்லட்டும்? இதை கேட்டு நான் பரவசமாகி இருப்பேன் என நீங்கள் (ஆளுநர்கள்) எதிர்பார்க்கிறீர்களா? இது சரியல்ல. நாம் இதைப்போல் பல விவகாரங்களை சந்தித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவும், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியும், ட்ரம்ப் பிரதமர் மோடியை இந்தியாவின் ‘ஜென்டில் மேன்’ பொய் பேசிவிட்டார் என்று விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

More News >>