முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஷா பேசல் மீதும் பாய்ந்தது பொது பாதுகாப்பு சட்டம்..
காஷ்மீரில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பேசல் மீதும் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டது. இதனால், அம்மாநிலத்தில் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக் கூடாது என்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. முன்னாள் முதல்வர்கள் உமர்அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட 500 பேர் வரை சிறை வைக்கப்பட்டனர்.
ஆறு மாதங்கள் கடந்தும் அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. மேலும், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த சட்டத்தின்படி 2 ஆண்டுகள் ஜாமீன் கொடுக்காமல் சிறை வைக்கலாம். உமர் அப்துல்லா மீது பாதுகாப்பு சட்டம் போட்டதை எதிர்த்து அவரது சகோதரி சாரா அப்துல்லா பைலட், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பேசல் மீதும் தற்போது பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான உத்தரவு நேற்று(பிப்.14) பிறப்பிக்கப்பட்டது. இவர் கடந்த 2009ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலாவதாக வந்தவர். ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பிடித்த முதல் காஷ்மீரி என்ற பெயரையும் பெற்றவர். 10 ஆண்டுகள் பணியாற்றிய இவர், காஷ்மீரில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிர்த்து ராஜினாமா செய்தவர். தனது 10 ஆண்டு பணி என்பது சிறை வாழ்க்கை போல் இருந்ததாகவும் கூறியவர். தற்போது ஜம்முகாஷ்மீர் மக்கள் இயக்கம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது