இங்கிலாந்து பெண் எம்பியை திருப்பி அனுப்பியது சரி.. காங்கிரஸ் தலைவர் கருத்து

இங்கிலாந்து பெண் எம்.பி.யை துபாய்க்கு திருப்பி அனுப்பியது சரியானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி.யாக உள்ள டெப்பி ஆபிரகாம்ஸ், அங்கு காஷ்மீர் விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.பி.க்கள் குழு தலைவராகவும் இருக்கிறார். இவர் தனது உறவினர்களை பார்ப்பதாக கூறி, நேற்று(பிப்.17) அதிகாலையில் டெல்லிக்கு வந்து சேர்ந்தார்.

அவர் விமான நிலையத்தில் குடிபெயர்வு துறை அதிகாரியிடம் பாஸ்போர்ட் கொடுத்து விசா கேட்டார். அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவுக்கு வருவதற்கான ஆன்லைன் விசா பெற்றிருந்தார். அது ஓராண்டுக்கு செல்லும். அந்த விசாவை கொண்டு வந்து விமான நிலையத்தில் குடிபெயர்வு துறை அதிகாரியிடம் முறையான விசாவை பெற்று கொள்ள வேண்டும்.

அதன்படி, டெப்பி ஆபிரகாம்ஸ் விசா கேட்ட போது, குடிபெயர்வு அதிகாரி கம்ப்யூட்டரில் பதிவான தகவல்களை பார்த்தால், அவருக்கு ஏற்கனவே விசா ரத்து செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இதையடுத்து, அவரை தனியாக அழைத்து சென்று விசாரித்து விட்டு, அவருக்கு ஏற்கனவே விசா ரத்து செய்யப்பட்ட தகவல் அனுப்பியும் வந்திருப்பதாக கூறி எச்சரித்தார். இதன்பின், அவர் துபாய்க்கு திருப்பி அனுப்பப்பட்டார்.இந்நிலையில், டெப்பி ஆபிரகாம்ஸ் தனது ட்விட்டரில் தான் விசா வைத்திருந்ததாகவும், தன்னை குடிபெயர்வு அதிகாரி மோசமாக நடத்தியதாகவும் சில புகார்களை கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தனது ட்விட்டர் பக்கத்தில், இங்கிலாந்து எம்.பி. டெப்பி ஆபிரகாம்ஸை திருப்பி அனுப்பியது அவசியமான நடவடிக்கை. அவர் இங்கிலாந்து எம்.பி. என்பதையும் விட பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டு ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பின் மறைமுக ஏஜென்ட்டாக செயல்படுபவர். அவரது தொடர்புகள் எல்லோரும் அறிந்த விஷயம்தான். எனவே, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான எந்த தாக்குதலையும் நிச்சயமாக முறியடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>