அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஓ.பி.எஸ். மாடு பிடிப்பாரா? சட்டசபையில் நகைச்சுவை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மாடு பிடித்தால், அதை பார்க்க ஆவலாக இருக்கிறோம் என்று சட்டசபையில் துரைமுருகன் பேசியதால் அவை கலகலப்பானது.
சட்டசபையில் தமிழக அரசின் 2020-21ம் ஆண்டு பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசும் போது, பட்ஜெட் தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைப் பாராட்டி பேசினர். அதில், அவரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று குறிப்பிட்டு பாராட்டினர்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், துணை முதல்வர் எப்போது மாடு பிடித்தார்? அவரை எல்லோரும் ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்கிறீர்களே, எந்த ஊர் ஜல்லிக்கட்டில் அவர் மாடு பிடித்தார்? என்று கேட்டார்.அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது, அதற்காக தனிச் சட்டம் இயற்றி கொடுத்ததால், துணை முதல்வரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்கிறார்கள். நீங்கள்(துரைமுருகன்) ஆசைப்பட்டால், புதுக்கோட்டை ஜல்லிக்கட்டுக்கு வந்து மாடு பிடியுங்கள். அதற்கு நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்றார்.
இதற்கு துரைமுருகன், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் துணைமுதல்வர் கலந்து கொண்டு மாடு பிடித்தால், எல்லா உறுப்பினர்களும் வந்து பார்த்து ரசிக்க ஆவலாக இருக்கிறோம் என்றார். இதை கேட்டு அனைத்து உறுப்பினர்களும் பலமாக சிரித்தனர். இதனால், அவை கலகலப்பானது.