என்.ஆர்.சி அமல்படுத்தினால் ஆதிவாசிகளுக்கும் பாதிப்பு.. உத்தவ் தாக்கரே பேட்டி
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தினால், அது இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமின்றி ஆதிவாசிகளையும் பாதிக்கும். அதை மகாராஷ்டிராவில் அமல்படுத்த மாட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு, சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை(சிஏஏ) கொண்டு வந்துள்ளது. இதன்படி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் நாடுகளில் இருந்து 2015ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்து குடியேறியவர்களில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று கூறி, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த குடியுரிமை சட்டத்தை தொடர்ந்து தேசிய மக்கள்தொகை பதிவேடு(என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு(என்.ஆர்.சி) ஆகியவற்றையும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே இன்று(பிப்.18) அளித்த பேட்டியில் கூறியதாவது: சிஏஏ, என்பிஆர் மற்றும் என்ஆர்சி ஆகியவை வெவ்வேறானவை. சிஏஏ அமல்படுத்தினால் யாருக்கும் பாதிப்பு வரப் போவதில்லை. யாரும் கவலைப்பட தேவையில்லை. அதே போல், என்பிஆர் என்பது மக்கள்தொகை கணக்கெடுப்புதான். இது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்படுவதுதான். இதனாலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று நான் கருதவில்லை.
அதே சமயம், என்.ஆர்.சி அமல்படுத்தினால், அது இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமின்றி, ஆதிவாசிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். என்.ஆர்.சியை கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.