இந்தியாவுடன் அமெரிக்கா மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம்.. டிரம்ப் அறிவிப்பு
இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவருடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். அன்று மதியம் அகமதாபாத்திற்கு வரும் டிரம்ப்பிற்கு விமான நிலையத்திலிருந்து மோட்டேரா ஸ்டேடியம் வரை மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர், அந்த ஸ்டேடியத்தில் டிரம்ப்புடன் பிரதமர் மோடியும் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட நிகழ்ச்சி, நமஸ்தே டிரம்ப் என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் முன்பாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இதே போல், அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் ஹவ்டி மோடி என்ற தலைப்பில் பிரதமர் மோடிக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவைப் போல், அமெரிக்காவிலும் விரைவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், அவருக்காக நமேஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அகமதாபாத்தில் 24ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை முடித்த பின் டிரம்ப், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் செல்கிறார். பின்னர் அவர் புதுடெல்லிக்குச் செல்கிறார். 25ம் தேதி அவருக்கு ராஷ்டிரபதி பவனில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளது,இந்நிலையில், வாசிங்டனில் டிரம்ப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:எனக்குப் பிரதமர் மோடியை மிகவும் பிடிக்கும். அவர் என்னிடம், விமான நிலையத்திலிருந்து மோட்டேரா ஸ்டேடியம் வரை எனக்கு அளிக்கப்படும் வரவேற்பில் 70 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று சொன்னார். அந்த ஸ்டேடியம் மிகப் பெரியது. அந்த நிகழ்ச்சி மிகவும் ஆரவாரமாக இருக்கும்.
இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும். அதே போல், அமெரிக்க அதிபர் தேர்தல் வருவதற்குள் இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.