ஜெயலலிதா பிறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவிப்பு..
ஜெயலலிதா பிறந்த தினமான பிப்.24ம் தேதியை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான பொதுவிவாதம் கடந்த 2 நாட்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று(பிப்.19) சட்டசபையில் பேரவை விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவர் கூறியதாவது:மறைந்த முதல்வர் ஜெயலலிதா, ஏழைப் பெண்களுக்கும், பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கும் மகத்தான பல திட்டங்களைச் செயல்படுத்தி பெண்கள், பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தார். தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் சுயஉதவிக் குழு திட்டம், மகப்பேறு சஞ்சீவி திட்டம் உள்பட பல திட்டங்களை செயல்படுத்தினார்.
இந்த அடிப்படையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கடைபிடிக்கப்படும்.
மேலும், பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளுக்கு 21வயது ஆகும் போது, அரசின் நிதியுதவி ரூ.2 லட்சம் வழங்கப்படும். பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பு உதவி தொகுப்பு வழங்கப்படும். ஆதரவற்றோர் இல்லங்களில் பெண் குழந்தைகளை பராமரிக்கும் வளர்ப்பு பெற்றோருக்கான ஊதியம் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும்.இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.