கர்நாடகாவின் இந்து மடத்தில் சாமியாராகும் முஸ்லிம் இளைஞர்..
கர்நாடகாவில் முருக ராஜேந்திர மடத்தின் அடுத்த குருவாக 33வயது முஸ்லிம் இளைஞர் ஒருவரை மடாதிபதி தேர்வு செய்திருக்கிறார்.
கர்நாடகா மாநிலம், கடாக்கில் முருக ராஜேந்திர மடம் உள்ளது. இந்து மதத்தைச் சார்ந்த இந்த மடத்தில் மடாதிபதியாக ஸ்ரீமுருகராஜேந்திர கொரனேஸ்வரா சுவாமி இருக்கிறார். இந்நிலையில், மடத்தில் தனக்கு அடுத்த குருவாக ஒரு முஸ்லிம் இளைஞரை இவர் தேர்வு செய்திருக்கிறார். தேவன் ஷெரீப் முல்லா என்ற அந்த முஸ்லிம் இளைஞருக்கு இஷ்ட லிங்கம் அளித்து, ருத்திராட்ச மாலை அணிவித்து சாமியாராகப் பொறுப்பேற்க வைத்தார்.
தொடர்ந்து சுவாமி ஸ்ரீமுருகராஜேந்திர கொரனேஸ்வா கூறுகையில், சாதி, மதம் எல்லாம் ஒரு தடையே இல்லை. கடவுள் உனக்குத் தோன்றினால், நீ நல்வழிப்பாதையில் தியாக உணர்வுடன் செயல்பட்டால் எந்த தடையும் கிடையாது. மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட சாதி, மதம் எல்லாம் யாரையும் தடுக்காது என்றார்.சாமியாராக மாறியுள்ள முல்லா கூறுகையில், என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. எனக்குள் ஒரு தெய்வீக உணர்வு ஏற்பட்டது. அதனால் மாறி விட்டேன். எனக்குப் புனித மாலை, இஷ்டலிங்கம் அளித்துள்ளனர். தர்மத்தின் வழியாக நான் செல்வேன். அன்பு, தியாகம் ஆகியவற்றை நான் போதிப்பேன் என்றார்.