சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு.. முதல்வர் திறந்து வைத்தார்
திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தமிழக அரசின் சார்பில் மறைந்த தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து சிவந்தி ஆதித்தனார் சிலையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கபட்டு இருந்த பின்னர், சிவந்தி ஆதித்தனார் படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குநர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி தொலைக்காட்சி இயக்குநர் பா.ஆதவன் ஆதித்தன், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மணி மண்டபத்தில் உள்ள நூலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
பின்னர், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடந்த விழாவிலும் முதலமைச்சர் பங்கேற்று உரையாற்றினார். முன்னதாக, சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து வீரபாண்டியபட்டணத்திற்கு கார் மூலம் வந்தார். அவரை தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன், தந்தி டிவி இயக்குநர் பா.ஆதவன் ஆதித்தன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதே போல், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைத் தினத்தந்தி இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன்பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.