டெல்லி அரசுப் பள்ளிக்கு டிரம்ப் மனைவி வருகை.. முதல்வருக்கு அனுமதியில்லை..

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப், டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வருகை புரியவுள்ளார். இந்நிகழ்ச்சியில், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ்சிசோடியா ஆகியோர் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மனைவி மெலனியா டிரம்ப்புடன் வரும் 24ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். 2 நாள் அரசு முறைப் பயணமாக வரும் டிரம்ப், அகமதாபாத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்டேடியத்தில் நடக்கும் நமஸ்தே டிரம்ப் என்ற பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கும் அவர் செல்கிறார். பின்னர், டெல்லிக்கு வருகிறார். டெல்லியில் டிரம்ப் மனைவி மெலனியா, தனியாக சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஆம் ஆத்மி ஆட்சியில் உள்ள டெல்லியில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஹாப்பினஸ் கிளாஸ் என்று ஒரு வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த வகுப்பில் தியானம், மகிழ்ச்சியாக இருத்தல் போன்றவை போதிக்கப்படுகின்றன. ஆம் ஆத்மி ஆட்சியில் துணை முதல்வராக உள்ள மணீஷ்சிசோடியா இந்த கல்வித் திட்டத்தைக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அரசுப் பள்ளிகளில் அறிமுகம் செய்தார்.இந்நிலையில், தெற்கு டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிக்கு வரும் 25ம் தேதி டிரம்ப்பின் மனைவி மெலனியாக வருகை தரவுள்ளார். அவரை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் வரவேற்பதாக நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த நிகழ்ச்சியில் இருவருமே புறக்கணிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு பிரச்சினைகளைக் கூறி, அவர்களை மத்திய அரசு புறக்கணித்துள்ளாகவும், நிகழ்ச்சிக்கு அவர்கள் அழைக்கப்படவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

More News >>