ஜெயலலிதா பிறந்த நாள் விழா.. அதிமுகவினர் உற்சாகம்..

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் உற்சாகமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் இன்று(பிப்.24) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதிமுகவினர் உற்சாகமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் காலை 10 மணியளவில் ஜெயலலிதாவின் சிலைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். எம்.ஜி.ஆா். சிலைக்கும் மாலை அணிவிக்கின்றனர். இதையொட்டி, தலைமைக்கழகம் முழுவதும் அதிமுக கொடி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்ததும், அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்குகிறார்கள்.

முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், இன்று காலையில் ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனைக்குச் சென்று, அங்கு இன்று பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதே போல், அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்.

More News >>