சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையைச் சுற்றிய அதிபர் டிரம்ப்..
சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளின் ராட்டையை சுற்றி மகிழ்ந்த அதிபர் டிரம்ப், ஆசிரம வருகைப் பதிவேட்டில் பிரதமர் மோடிக்கு நன்றி என குறிப்பிட்டு, கையெழுத்திட்டார்.
அமெரிக்காவிலிருந்து அந்நாட்டு விமானப்படை விமானத்தில் புறப்பட்ட அவர்கள் இன்று(பிப். 24) காலை 11.35 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்குக் காத்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, விமானம் அருகே சென்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்றார். மெலனியாவுக்கு கைகுலுக்கி வரவேற்றார். டிரம்ப், விமானத்தில் இறங்கியது முதல் இருபுறமும் நடனக் கலைஞர்கள் வரிசையாக நின்று பாட்டுப் பாடி ஆடியபடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, விமான நிலையத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் அவர்களுக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் டிரம்ப் தம்பதிக்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு, அவர்களை மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்குப் பிரதமர் மோடி அழைத்துச் சென்றார். சபர்மதி ஆசிரமத்தில் காந்தியடிகளின் ராட்டையை டிரம்ப் சுற்றி நூல் நூர்த்து பார்த்தார்.
அதன்பின், காந்தியடிகளின் பொருட்கள், அவரது புகைப்படங்கள் ஆகியவற்றையும் டிரம்ப்பும், மெலனியாவும் பார்த்து ரசித்தனர். அவர்களுக்குப் பிரதமர் மோடி, வரலாற்றுச் சிறப்புகளை விளக்கினார்.
சபர்மதி ஆசிரமத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் டிரம்ப், மெலனியா ஆகியோர் கையெழுத்திட்டனர். டிரம்ப் அந்த பதிவேட்டில், இந்த அற்புதமான வருகையை ஏற்படுத்தித் தந்த எனது சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி என்று குறிப்பிட்டார்.