டெல்லி கலவரத்தில் உயிரிழப்பு 7 ஆனது.. அமித்ஷா அவசர ஆலோசனை..
வடகிழக்கு டெல்லியில் இன்றும் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்ந்தன. கலவரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு(சிஏஏ) எதிராகவும், அடுத்து வரவுள்ள என்.பி.ஆர், என்.ஆர்சி ஆகியவற்றுக்கு எதிராகவும் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் ஷாகீன்பாக் என்னும் இடத்தில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குடும்பத்துடன் திரண்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்தும் முடங்கியே இருக்கிறது. இதே போல், தமிழகம் உள்படப் பல மாநிலங்களிலும் முஸ்லிம் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி ஞாயிறன்று, வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத் மற்றும் மவுஜ்பூர் பகுதியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே, டெல்லி தேர்தலில் தோல்வியுற்ற பாஜக பிரமுகர் கபில் மிஸ்ரா என்பவர், போலீசார் இந்த போராட்டக்காரர்களை 3 நாட்களுக்குள் அகற்றாவிட்டால், நாங்கள் களத்தில் இறங்கி அகற்றுவோம் என்று கெடு விதித்தார். மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் சிஏஏ ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து, போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது, சிஏஏ சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர்.
வன்முறை கும்பல் கல்வீசியதில் பலத்த காயம் அடைந்த போலீஸ் ஏட்டு ரத்தன்லால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். போலீஸ் துணை கமிஷனர் அமித் சர்மாவுக்குத் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த கலவரத்தில் காயமடைந்தனர். இன்று காலையிலும் பிரகாம்புரியில் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இது வரை, கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், டெல்லியில் அமைதியை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை பராமரிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று நள்ளிரவு 11 மணி முதல் 1.30 மணி வரை டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். போராட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்தும், கலவரங்களைத் தடுப்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இதைத் தொடர்ந்து, இன்று மீண்டும் அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். இதில், டெல்லி துணைநிலை ஆளுநர் பைஜால், முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில், உள்துறை செயலாளர் அஜய் பல்லா மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.