மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து டிரம்ப், மெலனியா அஞ்சலி..
டெல்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் அந்நாட்டுக் குழுவினர் நேற்று(பிப். 24) குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்தனர். அவர்களைப் பிரதமர் மோடி வரவேற்றார். விமான நிலையத்தில் கலைக்குழுவினர் நடனமாடி அவர்களை வரவேற்றனர்.
பின்னர், சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற அவர்கள், அங்குக் காந்தியடிகளின் வரலாற்று சிறப்புகளைப் பார்த்து ரசித்தனர். பின்னர், மோட்டோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றனர். அங்கு டிரம்ப் பேசுகையில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசினார். பிரதமர் மோடியும் இருநாட்டு நட்புறவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இதன்பின், டிரம்ப், மெலனியா மற்றும் இவாங்கா உள்ளிட்டோர் ஆக்ராவுக்குச் சென்று தாஜ்மகாலைப் பார்வையிட்டனர். பின்னர், இரவு டெல்லிக்குச் சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியா ஆகியோர் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றனர். அங்கு அமெரிக்க அதிபருக்கு ராணுவத் தளபதிகளின் அணிவகுப்புடன் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் அங்கிருந்து ராஜ் காட்டிற்குச் சென்றனர். அங்கு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனுக்கு டிரம்ப் சென்றார். அங்குப் பிரதமர் மோடியுடன் தனியாக உரையாடினார். இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு வர்த்தகக் குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் கூடிய கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.