ஜனாதிபதி மாளிகையில் அதிபர் டிரம்ப்புக்கு பாரம்பரிய வரவேற்பு..
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு ராணுவ மரியாதையுடன் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மனைவி மெலனியா, மகள் இவாங்கா மற்றும் அந்நாட்டுக் குழுவினர் நேற்று(பிப். 24) காலை 11.35 மணிக்குக் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்குக் காத்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, விமானம் அருகே சென்று அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஆரத்தழுவி வரவேற்றார். மெலனியாவுக்கு கைகுலுக்கி வரவேற்றார். விமான நிலையத்தில் கலைக்குழுவினர் நடனமாடி அவர்களை வரவேற்றனர்.
பின்னர், சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்ற அவர்கள், அங்குக் காந்தியடிகளின் வரலாற்றுச் சிறப்புகளைப் பார்த்து ரசித்தனர். பின்னர், மோட்டோரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் அவர்கள் பங்கேற்றனர். அங்கு டிரம்ப் பேசுகையில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசினார். பிரதமர் மோடியும் இருநாட்டு நட்புறவுகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இதன்பின், டிரம்ப், மெலனியா மற்றும் இவாங்கா உள்ளிட்டோர் ஆக்ராவுக்குச் சென்று தாஜ்மகாலைப் பார்வையிட்டனர். பின்னர், இரவு டெல்லிக்குச் சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கினர்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியா ஆகியோர் ஜனாதிபதி மாளிகைக்குச் சென்றனர். அங்கு அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மனைவி சவீதா கோவிந்த் ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அமெரிக்க அதிபருக்கு ராணுவத் தளபதிகளின் அணிவகுப்புடன் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மற்றும் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.