நீட் தேர்வு... சி.பி.எஸ்.இ விதிமுறைகளுக்குத் தடை

சி.பி.எஸ்.இ வகுத்திருந்த, நீட் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான வயதுவரம்பு விதிமுறைகளுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீட் தேர்வு குறித்த அறிவிப்பை சி.பி.எஸ்.இ பிப்ரவரி 7-ஆம் தேதி வெளியிட்டது. அதில் நாடு முழுவதும் நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் மார்ச் 9-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.

இந்தத் தேர்வுக்கான கட்டணத்தை மார்ச் மாதம் 10-ஆம் தேதி வரை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானர்கள் யார், அதற்கான தகுதிகள் என்ன? என்பது குறித்தும் சி.பி.எஸ்.இ சில வரைமுறைகளை வகுத்திருந்தது.

அதில், பொதுப்பிரிவு மாணவர்கள் மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அதிபட்ச வயது வரம்பு 25 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் 30 வயதுவரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்காமல், தனியாகத் தேர்வு எழுதியவர்கள், உயிரியல் பாடத்தை கூடுதலாக எடுத்துப் படித்த மாணவர்கள், 11 மற்றும் 12-ஆம் வகுப்பை முடிக்க கூடுதலாக 2 ஆண்டுகள் எடுத்துக் கொண்டவர்கள், டுடோரியல் காலேஜில் படித்து 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற விதிமுறை வகுக்கப்பட்டுடிருந்தது.

இந்நிலையில், சி.பி.எஸ்.இ வகுத்த இந்த வயது வரம்பு விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சி.பி.எஸ்.இ வயது வரம்பு விதிமுறைகளுக்கு தடைவிதித்தனர்.

மேலும், தனியாக 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள், டுடோரியல் காலேஜில் படித்து தேறியவர்கள், தகுதியான அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூலம் படித்து தேறி இருந்தால், அந்த மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்குத் தடை இல்லை என்று உத்தரவிட்டனர். அத்துடன், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More News >>