சமூக சேவகர் கல்யாணசுந்தரம் வாழ்க்கை கதையில் அமிதாப்.. அம்மாவாக நடிப்பது யார் தெரியுமா?
நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாறு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். தமிழில் நடிகையர் திலகம், தெலுங்கில் மகாநடி பெயர்களில் இப்படம் உருவானது. இப்படம் கீர்த்திக்குத் தேசிய விருது பெற்றுத்தந்தது. இதையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ராமராவ் என வரிசையாக வாழ்க்கை படங்கள் உருவாகி வருகின்றன. இதுதவிர கிரிக்கெட் வீரர்கள் டோனி, சச்சின் டென்டுல்கர் வாழ்க்கையும் படமானது. அந்த வரிசையில் தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் வாழ்க்கை திரைப்படமாகிறது.
இவரது வாழ்க்கை மற்றும் சமூக தொண்டு பற்றி ஆங்கிலத்தில் புத்தகமாக வெளியானது. அதைப் படித்த அமிதாப்பச்சன் நெகிழ்ந்தார். அவரது வாழ்க்கை படத்தில் நடிக்க முடிவு செய்தார். இதுபற்றி இந்தி படத் தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷிடம் பேசிய அமிதாப் கல்யாண சுந்தரத்தின் இளமைக்கால கதாபாத்திரத்தில் மகன் அபிஷேக்பச்சனும், முதிய தோற்றத்தில் நானே நடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.அமிதாப்பச்சனே நடிக்க விருப்பம் தெரிவித்ததையடுத்து மகிழ்ச்சி அடைந்த தயாரிப்பாளர் பரண் ஆதர்ஷ் சென்னை வந்தார். அங்குப் பாலம் கல்யாணசுந்தரத்தைச் சந்தித்துப் பேசினார். அவரது அனுமதி பெற்றதையடுத்து பட வேலைகளைத் தொடங்கியிருக்கிறார். பாலம் கல்யாண சுந்தரத்தின் அம்மா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடிக்க உள்ளார்.
தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் படம் உருவாகிறது. இப்படத்துக்காகக் கிடைக்கும் ராயல்டி தொகையை பொதுத்தொண்டுக்கு வழங்கக் கல்யாண சுந்தரம் முடிவு செய்துள்ளாராம்.